Wednesday, February 29, 2012

மார்ச் 4, 2012

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளின் அன்பு மக்களே,
   மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், ஈசாக்கை பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமை பணித்த நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற ஒரே மகனையும் கடவுளுக்காக கையளிக்கத் துணிகிறார் ஆபிரகாம். ஆண்டவர் அப்பலியைத் தடுத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்" என்று தனது மீட்புத் திட்டத்தை அவருக்கு முன்னறிவிக்கிறார். ஆபிரகாமைப் போல கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை நமக்காக கையளித்ததை திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளின் அரவணைப்பில் உள்ள நாம் இயேசுவின் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   ஆபிரகாம் வழியாக நீர் வாக்களித்த மீட்பின் கருவியாக செயல்படும் திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு எடுத்துக்காட்டாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
   உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும் உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம், உலக மக்களில் நிறைவைக் காணுமாறு உழைக்க தேவையான ஆற்றலை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவரான இறைவா,
   எங்கள் நாட்டினில் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், கொள்ளைச் சம்பவங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்ங்களால் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உம்மிலும் நீர் அளிக்கும் மீட்பிலும் நிறைவு காண்பவர்களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது இறை மாட்சிக்கு உரியவர்களாக உருமாற்றம் பெற்று, உமக்கு என்றும் சாட்சிகளாக வாழும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.