Wednesday, March 21, 2012

மார்ச் 25, 2012

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியோரே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, இயேசுவுக்கு தொண்டு செய்வதன் வழியாக கடவுளின் சட் டத்தை நம் உள்ளத்தில் ஏற்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு இறைமகனாய் இருந்தும், நம்மைப் பாவங்களின் பிடியிலிருந்து விடுவிக்க, மனித உடல் ஏற்று நமக்கு எடுத்துக்காட்டான மனிதராக வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் மடிந்து அவரிலே புதுவாழ்வு பெறும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் கடவுளின் புதிய உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகிறது. கடவுள் தமது சட்டத்தை மக்களின் உள்ளங்களில் பதிக்கப்போவதாகவும், மக்களின் பாவங்களை மன்னிக்கப்போவதாகவும் இறைவாக்கினர் எரேமியா வழியாக வாக்குறுதி தருகிறார். கடவுளின் வாக்குறுதிகளுக்கு நாம் தகுதிபெற வரம் வேண்டி, இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் அடைந்த மரண வேதனையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவோர் அனைவரும், அவர் வழியாக மீட்பைப் பெற்றுக்கொள்வர் என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். நமது துன்பங்கள் வழியாக நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உள்ளிருந்து செயலாற்றும் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது சட்டத்தை தங்கள் உள்ளங்களில் இருத்தி உமக்கு ஏற்ற வாழ்வு வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உடன்படிக்கையின் தலைவராம் இறைவா,
   உலக மக்களிடையே உமது புதிய உடன்படிக்கையை நிலைநாட்டி, உலகெங்கும் நீதியும் அன்பும் செழிக்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மனங்களை ஆள்பவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், வறுமைப் பிணிகளும் மறைய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னின்று உழைக்கும் நல்ல மனதினை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கீழ்படிதலை கற்பிப்பவராம் இறைவா,
   இவ்வுலகில் பல வகையான துன்பங்களால் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும், துன்பங்கள் வழியாக உமக்கு கீழ்படிந்து வாழக் கற்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அருள்பவராம் இறைவா,
   உமது திருமகன் இயேசுவைப் பின்பற்றி, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.