Wednesday, June 6, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
  கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் இருக்கின்ற மறைவான பிரசன்னத்தை திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கிறது. நம் ஆண்டவரின் திருஉடலையும் திருஇரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் பெறப் பேறுபெற்றவர்கள் நாம். இறுதி இரவுணவு வேளையில் கிறிஸ்து ஏற்படுத்திய இந்த நற்கருணைப் பலியே, நம் கத்தோலிக்க வழிபாட்டின் மையமாக விளங்குகிறது. நற்க ருணை நாதருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக கடவுள் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசே இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துவதையும், அவர்கள்மீது உடன்படிக்கையின் இரத்தத்தைத் தெளித்ததையும் இதில் காண்கிறோம். கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கைக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தலைமை குருவான கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்து தம்மையே மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்து வுக்கு உகந்த புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவராம் இறைவா,
   உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும்
ம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணை யும் மனம் தர வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவாம் இறைவா,
   எம் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும்
துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. பகிந்துவாழ அழைப்பவராம் இறைவா,
   உலகில் பல்வேறு தேவைகளாலும், துன்பங்களாலும் நொந்து வருந்தும் மனிதர் களோடு, உமது அன்பையும் இரக்கத்தையும் உதவியையும் பகிரும் கருவிகளாக வாழ, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் துணைபுரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமாம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளரத்
தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.