Wednesday, June 13, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். இறையாட்சியின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இறையாட்சி தானாக முளைத்து வளரும் விதையைப் போலவும், பெரிய மரமாக வளர்ந்து பறவைகளின் உறைவிடமாக மாறும் சிறிய கடுகு விதையைப் போன்றும் இருக்கிறது. இறைவனின் விருப்பத்தின்படி இந்த இறையாட்சி உலகெங்கும் விரிந்து பரவி வருகிறது. நாமும் இறையாட்சியின் தூதுவர்களாக செய லாற்றும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவரால் நடப்படுகின்ற கேதுரு மரத்தைப் பற்றி பேசு கிறது. உயர்ந்தவற்றை தாழ்த்துபவராகவும், தாழ்ந்தவற்றை உயர்த்துபவராகவும் தாம் இருப்பதை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். ஆண்டவரால் நட்டு வளர்க்கப்படும் மரத்தில் உறைவிடம் தேடும் பறவைகளாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நமது இவ்வுலக வாழ்வின் நிலையாமையைப் பற்றி பேசுகிறது. இந்த நிலையற்ற உடலில் இருந்து நாம் பிரியும் காலத்தில், கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன் நிற்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்க புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். நாம் செய்யும் நன்மைகளுக்கு கிறிஸ்துவிடம் கைம்மாறு பெறும் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழும் இறைவா,
  
உலகெங்கும் விரிந்து பரவி நிற்கும் உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இறையாட்சி நெறியில் உறுதிபடுத்தி வளரச்செய்ய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நட்டு வளர்ப்பவராம் இறைவா,
  
சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்டு, உலகெங்கும் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையின் மக்கள் அனைவரும், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும், உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் இறையாட்சியின் தூதுவர்க ளாக செயல்படவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உறைவிடம் தருபவராம் இறைவா,
  உம்மை அறியாத எம் நாட்டு மக்கள் அனைவரும் நீர் நட்டு வளர்த்த திருச்சபையில் உறைவிடம் தேடவும், உமது ஆட்சியை ஏற்றுக்கொண்டு உண்மைக்கு சான்றுபகர்ப வர்களாக வாழவும் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. உற்ற துணைவராம் இறைவா,
   நிலையற்ற எங்கள் உடலுக்காக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் நாங்கள், நிலையான உலகில் வாழத் தேவையான நன்மைகளை செய்து, உமது நீதி
த் தீர்ப்பின் தண்டனைக்கு ஆளாகாதவாறு உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வரங்களைப் பொழிபவராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நிழலில் புகலிடம் தேடும் இறையாட்சியின் மக்களாக வாழவும், உடல், உள்ள, ஆன்ம நலன்களில் வளரவும் 
தேவையான வரங்களைப் பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.