Friday, July 6, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 2:2-5 
   அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்று வரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்'' என்றார். "வன் கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.''
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 12:7-10
   சகோதர சகோதரிகளே, எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவ ரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'' என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ் துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கி றேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:1-6
   அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவை யெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி