Thursday, February 21, 2013

பிப்ரவரி 24, 2013

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
  எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நம் 
ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் மாட்சியில் பங்குபெற வேண்டுமெனில், முதலாவதாக நாம் அவரது பாடுகளில் பங்கேற்க வேண்டும். நாம் இயேசுவோடு இணையும்போது, இறைத்தந்தையின் உரிமை பிள்ளைகளாக மாற முடியும். இறைமாட்சியில் நாம் பங்கு பெறும்போது, பேதுருவைப் போன்று இயேசுவோடு இருப்பது நலம் என்பதை உணர் வோம். கிறிஸ்து இயேசுவின் வழியாக இறைவன் தரும் மாட்சியை உரிமையாக்கி கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையைப் பற்றி எடுத் துரைக்கிறது. ஆண்டவர் ஆபிரகாமுக்கு நாட்டை உரிமைச்சொத்தாக வழங்குவது குறித்த உடன்படிக்கையை செய்து கொள்வதைப் பற்றி வாசிக்க கேட்கிறோம். வானத்து விண் மீன்களைப் போன்று, ஆபிரகாமின் வழிமரபினரை பெருகச் செய்ய இருப்பதாக ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆண்டவரின் வாக்குறுதிகளுக்கு ஆபிரகாமின் நம்பிக்கையே காரணம் என விவிலியம் கூறுகிறது. நாமும் ஆபிரகாமைப் போல கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, அவரது ஆசிகளை உரிமையாக்கி கொள்ளும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் சிலுவையே மீட் புக்கு வழி என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவைக்கு பகைவர்களாய் இருப்போர் மானக் கேட்டுக்கும், அழிவுக்கும் ஆளாவர் என்று தெளிவுபடுத்துகிறார். இறைமகன் இயேசு மனிதரின் நிலைக்கு தம்மை தாழ்த்தியதால், நம்மை மாட்சிக்கு உரியவர்களாய் மாற்ற வல்லவர் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்து, அவர் தரும் உருமாற்றத்தை பெற்று மகிழும் வரம் கேட்டு, இவ்வாசகத் திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
       சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் எல் லோரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தரும் மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலம் அளிப்பவரான இறைவா,
   எம் நாட்டு மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடு கள் அனைத்தும் மறையவும், தீமை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் மீதான வெறுப்புணர்வு பெருகவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியை யும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நிறைவான ஆசீரைப் பெற்று உருமாறியவர்களாய், உலகத்தின் முன்னிலையில் இறை மாட்சிக்கு உகந்த புதுவாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.